அமித் ஷா, வைகோ  pt web
இந்தியா

”மொழியின் பெயரால் அரசியல் செய்கிறோமா?” | அமித்ஷா பேச்சுக்கு எதிராக தனியாளாக குரல் கொடுத்த வைகோ!

ஊழலின் பெயரால் மொழியின் பெயரில் அரசியல் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டிய நிலையில் வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

PT WEB

இந்துத்துவா கொள்கை, ஆர்எஸ்எஸ் கொள்கை மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி தராமல் வஞ்சிப்பதாக மாநிலங்களவையில் வைகோ ஆவேசமாக பேசினார். ஊழலை மறைக்கவே சிலர் மொழி அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டிய நிலையில் வைகோ பதிலளித்துள்ளார்.

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் - அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “உங்களுடைய சாதி அரசியல், ஊழல் அரசியல் போன்றவற்றை மறைக்கத்தான் மொழியை வைத்து அரசியல் செய்கிறீர்களா? உங்கள் ஊழல்களை நாங்கள் ஊர்ஊராகச் சென்று வெளிச்சமிட்டு காட்டுவோம். இந்தி, எந்த மாநில மொழிக்கும் எதிரானது அல்ல. அது தேசிய மொழி. இந்தி ஒரு இணைப்பு மொழிதான். இந்தி அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துகிறது. அனைத்து மொழிகளும் இந்தியை வலிமைப்படுத்துகின்றன” எனத் தெரிவித்தார்.

ஊழலின் பெயரால் மொழியின் பெயரில் அரசியல் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டிய நிலையில் வைகோ பதிலடி கொடுத்துள்ளார். அமித் ஷாவின் குற்றச்சாட்டை கடுமையாக எதிர்த்த வைகோ, ‘நீங்கள் ஹிந்தியை திணிக்கிறீர்கள்’ என பதிலடி கொடுத்தார். மேலும் அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்க தயாரா என வைகோ கேள்வி எழுப்பினார்.

வைகோ பேசுகையில், “உங்கள் இந்துத்துவா கொள்கை, ஆர்எஸ்எஸ் கொள்கை மற்றும் இந்தி, சமஸ்கிருதி திணிப்புக்கு எதிராக நாங்கள் இருப்பதால் தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியை வழங்காமல் மத்திய உள்துறை அமைச்சர் வஞ்சிக்கிறார். இந்தியா மட்டுமின்றி 114 நாடுகளில் வாழும் 120 கோடிக்கும் அதிகமானோர் தமிழ்மொழியை பேசுகிறார்கள். உள்துறை அமைச்சர் முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்தபோது இந்தி கட்டாயமாக்கப்படும் என்றார். அதன்பிறகுதான் போராட்டம் தொடங்கியது” எனத் தெரிவித்தார். அப்போது மாநிலங்களவையில் பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில், வைகோ மட்டுமே அமித் ஷாவை எதிர்த்து கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.