இந்தியா

தடுப்பூசியில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வழங்க மருத்துவர்குழு கோரிக்கை

webteam

கொரோனாவால் கர்ப்பிணிகள் இறப்பது அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறி மருத்துவர்கள் குழு ஒன்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

டெல்லியை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தாங்கள் தயாரித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,” கொரோனாவால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் அதிகம். எனவே அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.உலகில் கொரோனா அதிகம் பாதித்துள்ள 20 நாடுகளில் 9 நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 2 நாடுகளில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் பட்டியலில் கர்ப்பிணிகள் சேர்க்கப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.