இந்தியா

சமாஜ்வாதி அரசியலில் புதிய திருப்பம்... தேசியத் தலைவராக அகிலேஷ் நியமனம்

webteam

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதியில் உட்கட்சி பூசலின் உச்சமாக, முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை முலாயம் சிங்கிற்கும் மகனுக்கும் இடையே சமரசம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே மிகப்பெரிய அரசியல் போர் ஏற்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்‌சித் தலைவர் முலாயம் சிங்கின் மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோவில் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில், முலாயம் சிங், மாநில தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் பங்கேற்காத நிலையில், அகிலேஷ் யாதவ் தேசிய தலைவராக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமர்சிங் கட்சியில் இருந்தும், ஷிவ்பால் சிங் மாநில தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், அகிலேஷ் தலைமையிலான தேசிய மாநாடு சட்டவிரோதமானது என முலாயம் சிங் அறிவித்துள்ளார். இதனால், கட்சியில் குழப்பம் மட்டுமே எஞ்சியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முலாயம் சிங் மற்றும் அவரது தம்பி ஷிவ்பால் யாதவ் ஓரணியாக உள்ளனர். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவும் அவரது சித்தப்பாவும் எதிரணியாக செயல்பட்டு வருகின்றனர்.