உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீரானது குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிக்கு உள்ளாகி இருக்கிறது.
முக்கியமாக கனமழை காரணமாகவும், வெள்ள நீர் காரணமாகவும் பிரக்யராஜ், வாரணாசி , ஜல்வான்புரா போன்ற பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால் மக்கள் கேன்கள் மூலம் வாரி இரைத்து வெள்ளநீரை வெளியேற்றி வருகின்றனர்.
வெள்ள நீரில் இருந்து பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்புபணியில் தன்னார்வலர்களும், மீட்புப்படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான பகுதியில் இருந்து மீட்டு முகாம்களிலும் பாதுகாப்பான சூழ்நிலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் உத்தர பிரதேச வெள்ளம் குறித்த பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் காவல் அதிகாரி ஒருவர், தனது வீட்டிற்குள் நீர் புகுந்தபோது, அதனை கங்கை அம்மனாகக் கருதி வழிபட்டு அடுத்தடுத்து வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
சந்திரதீப் நிஷாத் என்ற அந்த காவலர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். சீருடையில் இருந்த அவர், வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தில் பால் ஊற்றி, மலர்கள் தூவி, ’ஜெய் கங்காமைய கி’ (Jai Ganga Maiya ki) என்று முழக்கமிட்டவாறு வழிபாடு செய்தார். மேலும், ”தான் வேலைக்குச் செல்லும்போது கங்கை அன்னை வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அதனால், வீட்டு வாசலில் அவருக்குப் பூஜை செய்து ஆசி பெற்றேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில், இடுப்பளவு தண்ணீரில் அவர் நீச்சலடித்துக் கொண்டும், தண்ணீரில் குதித்தும், "ஜெய் கங்கா மைய கி" என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறார். "ஆயிரக்கணக்கான பக்தர்கள் உன்னிடம் வருகிறார்கள், ஆனால் நீயே என்னைத் தேடி வந்துள்ளாய்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்று வருகின்றன. சிலர் அவரது பக்தியையும், பேரிடரின்போது அவர் வெளிப்படுத்திய நேர்மறையான மனப்பான்மையையும் பாராட்டியுள்ளனர். ஆனால், பலர் உத்தரப் பிரதேச அரசின் நீர் மேலாண்மை குறித்து விமர்சனம் செய்துள்ளனர். சரியான வடிகால் அமைப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.