உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கோவைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஹரித்வாரில் உள்ள ஜஸ்வாலா பிரான் காலியாரைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கும், கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தின்போது ரூ.15 லட்சம் ரொக்கத்தையும், லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும் பெண் வீட்டார் வரதட்சணையாக உள்ளது. இருப்பினும், மாப்பிள்ளை வீட்டார் மேலும் ரூ.25 லட்சம் ரொக்கமும், ஸ்கார்பியோ எஸ்யூவி காரும் கேட்டுள்ளனர். தொடர்ந்து இதைக் கேட்டு மருமகளை மாமியார் நச்சரித்து வந்துள்ளார். இந்த விஷயம் பஞ்சாயத்தில் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னும் மாமியார் அந்த பெண்ணை விடுவதாக இல்லை. தொடர்ந்து மருமகளை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதன் உச்சமாக மருமகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் காரணமாக அவரது உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியது. பின்னர் மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர். எனவே இதுதொடர்பாக பெண்ணும் அவரது தந்தையும் சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காங்கோ காவல்நிலையத்தில் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார், மைத்துனர்கள் ஆகியோர் மீது கொலை முயற்சி, கொடுமைப்படுத்தல் மற்றும் வரதட்சணை ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.