பாஜகவினர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட, ”புனித ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை வரும் ஹோலி பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” என பீகாரைச் சேர்ந்த மதுபனி மாவட்டத்தில் உள்ள பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சம்பல் வட்ட அதிகாரி (CO) அனுஜ் சவுத்ரி, “ஹோலியின் வண்ணங்களைப் பார்த்து யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அன்று வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார். இவர்களுடைய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. குவிந்தன காவல் துறை அதிகாரியை மாநில பாஜக இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இந்த நிலையில் அதே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பாஜக எம்எல்ஏவான கேதகி சிங், முஸ்லிம் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர், ”ஹோலி பண்டிகை வருடத்திற்கு 1 நாள் மட்டும்தான் வருகிறது. ஆனால் வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது என சம்பல் மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் தெளிவாக பேசினார். அந்த நாளில் ஏதாவது தவறுதலாக நடந்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு மருத்துவ கல்லூரியில், முஸ்லிம்களுக்கு என ஒரு தனிப் பிரிவு உருவாக்க வேண்டும் முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். முஸ்லிம்களுக்கு எல்லாவற்றிலும் பிரச்னைகள் உள்ளன. அது ராம நவமி, ஹோலி, தீபாவளி அல்லது துர்கா பூஜை என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு எங்களுடன் மருத்துவ சிகிச்சையிலும் சிக்கல்கள் இருக்கலாம். அவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல் மற்றொரு மாநில அமைச்சரான ரகுராஜ் சிங், ”ஹோலியின்போது வண்ணங்களைத் தவிர்க்க முஸ்லிம்கள் தங்களை தார்பாயினால் மூடிக்கொள்ள வேண்டும். ஹோலி பண்டிகையைக் கொண்டாடும்போது வண்ணப்பொடிகள் எவ்வளவு தூரம் வீசப்படுகிறது என்பதைப் பற்றி ஹோலி கொண்டாட்டக்காரர்கள் கவலைப்படுவதில்லை. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) வளாகத்திற்குள் ஒரு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற உள்ளூர் தலைவரை சொன்னதை ஆதரிக்கிறேன். அதற்காக எனது செல்வம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.