உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டமைக்கப்பட்டவுள்ள இக்கோயிலைக் காணவும், பக்தி பரவசத்தில் மூழ்கவும் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அங்கு நாள்தோறும் படையெடுத்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்து தர்ம சேனாவின் தலைவர் சந்தோஷ் துபே என்பவர் அயோத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுமார் ₹200 கோடி காணிக்கைப் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாட்டுச் சாணக் குவியலுக்குள் மற்றும் கோயில் ஊழியர்களின் வீடுகளில் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், இக்குற்றச்சாட்டை ராமஜென்மபூமி தீர்த்தக் ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் மறுத்துள்ளார்.
இவ்விவகாரம் அரசியல் புயலை எழுப்பிய் நிலையில், 'ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா' அறக்கட்டளையின் கோரிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விவகாரத்தை விசாரிக்க லக்னோ மண்டல கமிஷனர் விஜய் விஸ்வாஸ் பந்த், ஐஜி கிரண் எஸ். மற்றும் நிதித்துறை சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகிய 3 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார். அவர்கள் விசாரணை நடத்திவரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் எவரும் அயோத்தியைவிட்டு வெளியேறுவதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டில் முறையாக நடவடிக்கை எடுத்தால் பாஜக ஆட்சி கவிழும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசோ அல்லது உத்தர பிரதேச மாநில அரசோ ஏன் இன்னும் ஒரு முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யவில்லை என்றும், சி.பி.ஐ அல்லது அமலாக்கத் துறை ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், ”பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இணைந்து கடவுளின் பெயரால் மக்களின் நம்பிக்கையைத் திருடி, திட்டமிட்ட கொள்ளை நடத்தியுள்ளனர்” என்று கடுமையாகக் சாடியுள்ளார்.