உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்திலிருந்து டேராடூனுக்கு ஹெலிகாப்டர் ஒன்று, புறப்பட்டுச் சென்றது. அதில் ஒரு விமானி மற்றும் ஐந்து பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் ஹாத்தி பர்வதம் அருகே காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அதைக் கண்டுபிடிப்பதற்காக அதிகாரிகள் மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பினர். இந்தச் சூழலில்தான் உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகல் 2:21 மணிக்கு ஜோஷிமத் பகுதியில் உள்ள சாய் கிராமத்திற்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகவும், மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து கூட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மேம்பட்ட மருத்துவ வசதிகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.