உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள நாகராசு குருத்வாராவில் சுமார் 72 மணி நேரம் நீடித்த சீக்கிய நிஹாங் பிரிவினரின் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் மோதல், பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் முடிவுக்கு வந்தது.
ஸ்ரீஹேமகுண்ட் சாகிப் நோக்கி புனித யாத்திரை சென்று திரும்பிய நிஹாங் சீக்கியர்களுக்கும், சாமோலி மாவட்டத்தின் கர்ணபிரயாக் பகுதி உள்ளூர் மக்களுக்கும் இடையே, கடந்த 16ஆம் தேதி சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இது, பின்னர் வன்முறையாக மாறியதில் இருதரப்பும் காயமடைந்தது. இதன் காரணமாக, உத்தராகண்ட் போலீசார் சிலரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தங்களது சகாக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஜூன் 20 அன்று, ஆயுதம் ஏந்திய நிஹாங் சீக்கியர்கள் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாகராசு குருத்வாராவுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் குருத்வாராவின் 4-ஆவது மாடி மற்றும் மொட்டை மாடிப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அங்கிருந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உத்தராகண்ட் போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பலனளிக்கவில்லை.
இறுதியாக, பஞ்சாபிலிருந்து டம்டாமி தக்சல் அமைப்பின் தலைவர் பாபா ஹர்நாம் சிங் கல்சா அனுப்பிய ஐந்து பேர் கொண்ட அடங்கிய குழு ருத்ரபிரயாக் வந்தடைந்தது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிஹாங் சீக்கியர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று மொட்டை மாடியில் இருந்த நிஹாங் சீக்கியர்கள் கீழே இறங்கி வரச் சம்மதித்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவம், அமைதியான முறையில் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட நிஹாங் சீக்கியர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாபிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு, குருத்வாராவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும், உத்தரகாண்ட் அரசு இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்குகளின் விசாரணை சாமோலி மாவட்டத்திலிருந்து ஹரித்வாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
300 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு போர்வீரர் அமைப்பாக, நிஹாங்குகள் சீக்கிய மதத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்கள், நீண்டகாலமாக நம்பிக்கை, இராணுவ சக்தி மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் முக்கியப் புள்ளியாக இருக்கின்றனர். நிஹாங்குகள் தங்களின் நீல நிற உடை, துமல்லா தலைப்பாகைகள் மற்றும் ஆயுதங்கள் காரணமாகத் தனித்துத் தெரிகிறார்கள். சமயத்தைப் பாதுகாப்பதும், நலிந்தவர்களைக் காப்பதும், எல்லா நேரங்களிலும் போருக்குத் தயாராக இருப்பதும் அவர்களின் கடமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நிஹாங்குகள் எப்போதும் ஆயுதங்களை ஏந்திச் செல்கிறார்கள். இருப்பினும், அவர்கள் நிராயுதபாணிகளுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.