நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலைச் சேர்ந்தவர், பிரமோத். இவர், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலையில் உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். திடீரென உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு, தெருவோரம் அமர்ந்தார். சில நொடிகளிலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்தார். சில மணி நேரம் கழித்து அந்த வழியாகச் சென்றவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய திடீர் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.