உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்திலிருந்து டேராடூனில் உள்ள சஹஸ்த்ரதாரா ஹெலிபேட் நோக்கி தனியார் ஹெலிகாப்டர் ஒன்று, நேற்று (அக்டோபர் 30) மதியம் சுமார் 1.14 மணிக்குப் புறப்பட்டுள்ளது. இதில் விமானி ஒருவர் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர். ஜோஷிமத் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றபோது, ஹெலிகாப்டருடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாய் கிராமத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் விமானி உட்பட 6 பேரும் உயிரிழந்துவிட்டதாக சமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மலைப்பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மோசமான வானிலை இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
மேலும், 'ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன்' (Trans Bharat Aviation) நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகள் அனைவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்திருக்கும் நிலையில், அவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.