இந்தியா

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : மோடி, அமித்ஷா, ராம்நாத் கோவிந்த் ஆறுதல்!

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : மோடி, அமித்ஷா, ராம்நாத் கோவிந்த் ஆறுதல்!

Veeramani

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட பெரும்வெள்ளத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருவான நிலைமையை சமாளிக்க அனைத்து ஆதரவையும் தருவதாக, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்வீட்களில், “தேசிய பேரிடர் மீட்பு படையின் (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக உத்தரகாண்டில் நிறுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் படையின் கூடுதல் துருப்புக்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு குறித்து முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஜி, ஐடிபிபியின் டிஜி மற்றும் என்டிஆர்எஃப் டிஜி ஆகியோருடன் பேசியுள்ளேன். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மக்களைப் பாதுகாப்பதற்காக போரில் ஈடுபட்டுள்ளனர். 'தேவபூமி'க்கு சாத்தியமான எல்லா உதவிகளும் வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலத்துடன் இந்தியா நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். "உத்தரகண்ட் மாநிலத்தின் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். இந்தியா உத்தரகாண்ட் உடன் நிற்கிறது, அங்குள்ள அனைவரின் பாதுகாப்பிற்காக தேசம் பிரார்த்தனை செய்கிறது" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்தும் இந்த பேரழிவு குறித்து கவலை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்,  “உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் அருகே பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பேரழிவு ஆழ்ந்த கவலை தருகிறது. மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன என்று நான் நம்புகிறேன், "என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “இது ஒரு சோகமான சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு இயற்கை பேரழிவு. உத்தரகண்ட் அரசுக்கு தேவைப்படும் ஒவ்வொரு உதவியும் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அதில் எந்த தயக்கமும் இல்லை” என தெரிவித்தார்