‘சிங்கம் நாய்களை வேட்டையாடுவதில்லை’ என பட்டியலினத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியை உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சாடியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன், ஹரித்வார், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் போன்ற மாவட்டங்களில் சட்டவிரோத சுரங்கத் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய பாஜக எம்பியுமான திரிவேந்திர சிங் ராவத் கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இவை அனுமதியின்றி நகர்வதாகவும், இரவில் லாரிகளில் அதிக சுமை ஏற்றிச் செல்வதாகவும், இதனால் குடிமை உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
பாஜக எம்பியே, பாஜக அரசுக்கு எதிராக சுமத்திய இந்த குற்றச்சாட்டு, அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த இந்த குற்றச்சாட்டுகளை மாநில சுரங்கத் துறை செயலாளர் பிரஜேஷ் சாந்த் மறுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், “ இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது , தவறாக வழிநடத்துவதாகும். இந்த ஆண்டு சுரங்க வருவாய்க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டது மட்டுமல்லாமல், அதை விட ரூ.200 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது. இதுவே முதல் முறை.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரஜேஷின் பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிவேந்திர சிங் ராவத் , “இதற்கு நான் என்ன சொல்வது? சிங்கங்கள் நாய்களை வேட்டையாடுவதில்லை” என்று சர்ச்சைக்குரிய பதில் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி பிரஜேஷ் சாந்த் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அவரை இவ்வளவு மோசமாக முன்னாள் முதல்வர் அவமதித்திருப்பதாக உத்தரகண்ட் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், உத்தரகண்ட் ஐஏஎஸ் சங்கத் தலைவர் ஆனந்த் பர்தன் தலைமையில் (30-03-25) அன்று நடைபெற்ற கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்தில், அந்த கூட்டத்தில், அனைத்து குடிமக்களைப் போலவே ஐஏஎஸ் அதிகாரிகளும் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்கள் கண்ணியத்தை காக்க வலியுறுத்தியும் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடமும், தலைமை செயலாளரிடமும் மனு அளித்திருக்கிறார்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர்.