உத்தரகாண்டில் முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தை, இந்துக்களுக்கு பங்கு போட்டு விற்ற விவகாரம் அம்மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஷேகுல்-ஹிந்த் அறக்கட்டளைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இந்த நிலம், கடந்த 2004ஆம் ஆண்டு, மதரஸா பள்ளியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது இந்த நிலம் வாங்கப்பட்டது. இதற்கிடையே, 2016ஆம் ஆண்டு, அறக்கட்டளை நிலத்தை விற்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. ஆனால், விவசாய நோக்கங்களுக்காக மட்டுமே நிலத்தை விற்க முடியும் என்று அரசாங்கம் பதிலளித்தது. இருப்பினும், நிலச் சட்டங்களை அவர்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது, அறக்கட்டளை பின்னர் அந்த நிலத்தை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கு விவசாய சொத்தாக விற்றுள்ளது. அது, 2022ஆம் ஆண்டு மேலும் சிறிய நிலங்களாகப் பிரிக்கப்பட்டு சுமார் 70 முதல் 80 இந்து நபர்களுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இந்த மனை மாற்றமும் விற்பனையும் நடைமுறையில் உள்ள நிலச் சட்டங்களை மீறுவதாக அதிகாரிகள் கவனத்துக்குச் சென்ற நிலையில், விசாரணை தொடங்கியது. மேலும், இந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றது. அறக்கட்டளை சொத்தை விவசாய நிலமாக மட்டுமே விற்க முடியும் என நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது. மேலும், மாநில நிலச் சட்டங்களை மீறியதாகக் கூறி, 4.192 பிகா நிலத்தை சீல் வைக்க நிர்வாகம் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. தவிர, நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான செயல்முறை நடந்து வருகிறது.