இந்தியா

ஜிஎஸ்டி வரிக்கு நீதிகேட்டு விஷம் அருந்திய தொழிலதிபர்

ஜிஎஸ்டி வரிக்கு நீதிகேட்டு விஷம் அருந்திய தொழிலதிபர்

rajakannan

விஷம் அருந்திய நிலையில் உத்தரகாண்ட் பாஜக அலுவலகத்தில் நுழைந்த தொழிலதிபர், ஜிஎஸ்டியால் கடனாளி ஆனதாக கதறி அழுது பேசினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் திரிவேந்திர ராவட் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. டேராடூன் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அமைச்சர் சுபோத் உனியல் மக்களின் குறைகளை இன்று கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போது ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்த பாண்டே என்ற தொழிலதிபர் அலுவலகத்திற்கு திடீரென நுழைந்தார். 

உள்ளே நுழைந்த அவர் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து பேசினார். தனது பேச்சின் நடுவே விஷம் அருந்தியுள்ளதாக அவர் கூறியதால் அங்கிருந்த அனைவரும் பதற்றமானார்கள். உடனடியாக ஊடகங்களும் அவரது பேச்சை பதிவு செய்தார்கள். அவர் பேசுகையில், “அரசு என்னை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டது. ரூபாய் நோட்டு ரத்து, ஜி.எஸ்.டி நடவடிக்கையால் நான் மிகுந்த கடனாளியாகி விட்டேன். கடந்த 5 மாதங்களாக அரசை அணுக முயற்சித்து வருகிறேன். ஆனால் முதலமைச்சரால் எந்தப் பயனும் இல்லை. அவர் யாருடைய குரலையும் கேட்பதில்லை. என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் உள்ளனர். நான் இனிமேல் வாழமாட்டேன். நான் விஷமருந்தி உள்ளேன்” என்றார்.

பேசிக் கொண்டிருந்த போது அவர் அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. பாண்டே உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியு வார்டில் சேர்க்கப்பட்டார். விஷம் அருந்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாண்டே வாகனங்கள் வைத்து கடந்த 5 ஆண்டுகளாக தொழில் செய்து வந்துள்ளார்.