இந்தியா

திருமண விழாவில் கலந்து கொள்ள பேருந்தில் சென்றவர்கள் 25 பேர் உயிரிழப்பு; நிதி அறிவிப்பு

webteam

உத்தரகாண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 45 பேர் நேற்று இரவு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பேருந்து ரிக்னிவால் பிரோகால் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை கலந்த பேருந்து தாறுமாறாக ஓடி 500 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து விபத்து குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காவல்துறையினருக்கும், தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கிய நபர்களை உடனடியாக மீட்டு அருகே இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி அசோக்குமார், “விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து இதுவரை 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நான்கு கம்பெனிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார். மேலும் படுகாயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேருந்து விபத்து நடைபெற்ற இடத்தை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அப்போது முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரமேஷ் பொக்ரியாலும் உடன் இருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் முதல்வர் நேரில் சென்று விட்டு ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த பேருந்து விபத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் தங்களது இரங்கல்களை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உத்தரகாண்டின் பவுரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏராளமான உயிரிழந்தது மனதை உருக்குகிறது. இந்த கோரமான தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது” தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் பேருந்து விபத்து மற்றும் பனிச்சரிவில் ஏராளமானோர் அடுத்தடுத்து உயிரிழந்தது உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.