இந்தியா

கொலையை மறைக்க மனைவியின் உடலை 72 துண்டுகளாக வெட்டிய கணவர்.. 2010 வழக்கில் திருப்பம்!

Sinekadhara

2010ஆம் ஆண்டு டேராடூன் நீதிமன்றம் தனது மனைவியை கொன்று 72 துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசிய டெல்லி சாஃப்ட்வேர் என்ஜினீயருக்கு தற்போது உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

2010ஆம் ஆண்டு...

நாட்டையே உலுக்கிய இந்த கொடூர கொலையை சற்று திரும்பிப் பார்க்கலாம்! டெல்லியைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜீனியர் ராஜேஷ் குலாத்தி. இவரது மனைவி 33 வயதான அனுபமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குலாத்திக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதை அறிந்துகொண்ட அனுபமா இதுகுறித்து அவரிடம் கேட்கும்போதெல்லாம் இருவருக்குமிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒருநாள் அதாவது 2010ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி இதேபோல் சண்டை நிகழ்ந்திருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த குலாத்தி அனுபமாவின் தலையை பிடித்து கட்டிலில் வேகமாக அடித்துள்ளார். மயங்கி விழுந்த மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலையும் செய்துள்ளார். தான் கொலை செய்தது வெளியே தெரியக்கூடாது என முடிவெடுத்த குலாத்தி அடுத்த நாள் மனைவியின் உடலை 72 துண்டுகளாக வெட்டி வீட்டில் ஃப்ரீசரில் வைத்துவிட்டார். பின்னர் அதில் சில சில துண்டுகளை அவ்வப்போது பாலீதின் கவரில் வைத்து சாக்கடையில் வீசி வந்துள்ளார்.

இதற்கிடையே தனது குழந்தைகளும், அனுபமாவின் குடும்பத்தாரும் அவரைப் பற்றி கேட்டபோதெல்லாம் வெளியே சென்றிருப்பதாகக் கூறி சமாளித்து வந்துள்ளார். இதில் சந்தேகமடைந்த அனுபமாவின் சகோதரர் சுஜன் பிரதான் தனது சகோதரியை காணவில்லை என 2010ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து குலாத்தியிடம் போலீசார் விசாரிக்கையில் அவர் தனது மனைவியை கொலை செய்ததையும், உடலை 72 துண்டுகளாக வெட்டி கவரில் போட்டு யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையில் வீசிவந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தனது காதலி ஜுமா தத்தாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததையும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முழுவதுமாக தடயங்களை அழிப்பதற்குள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். அனுபமாவின் உடலின் சில துண்டுகளை மட்டும் கைப்பற்றிய போலீசார் குலாத்தி மீது 350 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்து ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.

தற்போது...

இந்நிலையில் தற்போது குலாத்திக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அறுவைசிகிச்சை செய்யவேண்டி இருப்பதாகவும் கூறி ஜாமீன் கோரியதையடுத்து அவருக்கு 45 நாட்கள் குறுகியகால ஜாமீன் வழங்கியுள்ளது உத்தராகண்ட் உயர் நீதிமன்றம். இந்த வழக்கு குறித்து செப்டம்பர் 15ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.