நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் சவுத்ரி (28). இவர், நேற்று காலை தனது வீட்டிற்கு வெளியே நிற்கிறார். அப்போது அந்த வழியே செல்லும் ஒரு நபர், சவுத்ரியை வரவேற்று, அவரது தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு நடந்து செல்கிறார். பின்னர் அவரையே பார்த்துக் கொண்டு நிற்கும் அமித், அடுத்த சில நொடிகளில் அப்படியே சரிந்து கீழே விழுகிறார். அதன்பிறகு, அவருக்கு முதலுதவி அளித்தபோதும் பயனில்லை. இறுதியில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் அதே மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவருக்கும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது, மார்ச் 20 அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்தார். ஆனால் மருத்துவர்களின் அந்த முடிவை ஏற்க மறுத்த அவரது மகன் அதிக், தனது தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் வேறொரு இருதய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும் அவரது மரணத்தை உறுதி செய்தனர்.
பின்னர், அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்தபடியே அதிக், நண்பரின் பைக்கில் சென்றார். ஆனால், வழியிலேயே அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இதையடுத்து, தந்தை மற்றும் மகன் இருவரின் இறுதிச்சடங்குகளும் ஒன்றாக நடைபெற்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.