up school
up school twitter
இந்தியா

உ.பி. : இஸ்லாமிய மாணவர் தாக்கப்பட்ட பள்ளி குறித்து வெளிவந்த உண்மை... பள்ளியை மூடும் கல்வித்துறை!

PT WEB

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உள்ள பள்ளியொன்றில், 2ஆம் வகுப்பு படித்துவந்த இஸ்லாமிய மாணவரொருவரை சக மாணவர்களைக் கொண்டு ஆசிரியையே அடிக்கச் சொன்ன வீடியோ சில தினங்களுக்கு முன் இணையதளங்களில் வைரலாகியது.

ஆசிரியை இதுகுறித்து விளக்கம் அளித்தபோதிலும், அதுவும் சர்ச்சையாகவே அமைந்தது. ஆசிரியையின் செயலுக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்தப் பள்ளிக்கூடத்தை மூடுவதற்கு கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பள்ளி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

இதன் காரணமாக பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. பள்ளி மூடப்படுவதைத் தொடர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வேறு பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் 2019ஆம் ஆண்டில், அப்பள்ளி நர்சரி முதல் 5ஆம் வகுப்பு வரை நடத்துவதற்கு அங்கீகாரம் பெற்றிருந்தாகச் சொல்லப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட அந்த அங்கீகாரம், கடந்த ஆண்டுடன் முடிவடைந்துள்ளது. ஆனால் அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் பள்ளிக்கூடம் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்காரணத்தினாலேயே பள்ளி மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.