உத்தரப்பிரதேசத்தில் கணவர் ஒருவர், தன் மனைவி வேறொரு நபருடன் காரில் சென்றதை பார்த்துள்ளார். அந்த காரை நிறுத்த அக்கணவர் முயன்றபோது, அவரை காரின் பானட்டில் வைத்துக்கொண்டு பல கிலோமீட்டர்கள் தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார் உள்ளிருந்த ஓட்டுநர். இச்சம்பவத்தின் வீடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்...
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சமீர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மஹிர். கணவன் மனைவி இருவருக்குமிடையே சுமூகமான உறவு இல்லாத நிலையில் மனைவியின் நடத்தையில் சமீருக்கு சந்தேகம் இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று சமீர் இருசக்கர வாகனத்தில் சென்றபொழுது, மஹிர் வேறொரு ஆணுடன் காரில் சென்றதை பார்த்துள்ளார். இதையடுத்து சமீர் அக்காரை நிறுத்தும் பொருட்டு தனது இருசக்கரவாகனத்தில் காரின் முன்னே சென்றுள்ளார்.
இருப்பினும் காரை ஓட்டியவர், அதனை நிறுத்தாமல் சென்றதால் சமீர் அந்த காரின் பானட்டில் சிக்கிக்கொண்டுள்ளார். மேலும் காரானது கட்கர் கோட்வாலி பகுதியில் உள்ள ஆக்ரா மாநில நெடுஞ்சாலையில் கார் பல கிலோமீட்டர்கள் அதிவேகமாக சென்றுள்ளது. காரைத் துரத்திச் சென்ற மற்ற வாகனங்கள், சமீரை சுமந்து சென்ற காரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து பேனட்டிலிருந்து இறங்கிய சமீர், காரை ஓட்டிச்சென்ற நபருடனும் தன் மனைவி மஹிருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிறகு சமீர் கொடுத்த புகாரை அடுத்து காரை இயக்கிய நபர் கைது செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் மஹிரும் அந்த காரை இயக்கிய நபரும் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தெரியவந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் காவல்துறை தரப்பில் இதுபற்றி ஏதும் கூறப்பட்டதாக தகவல் இல்லை.