இந்தியா

சமூக இடைவெளிக்காக மரத்தில் வீடுகட்டி தங்கும் நபர் !

சமூக இடைவெளிக்காக மரத்தில் வீடுகட்டி தங்கும் நபர் !

jagadeesh

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் மரத்தில் சிறிய வீடு ஒன்றைகட்டி அதில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் சமூகத்தொற்று பரவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடித்தல், வீடுகளுக்குள்ளேயே தனித்து இருக்க வேண்டும் ஆகியவையே ஒரே வழி என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அம்மாநிலத்தின் ஹபூர் பகுதியைச் சேர்ந்த முகுல் தியாகி என்பவர் மரத்தில், கட்டைகளை கொண்டு சிறிய வீடு கட்டி அதில் தனியாக வசித்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது "சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்".

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் " எனவே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென முடிவெடுத்து தனியாக வசிக்க எண்ணினேன். எனவே எனது மகன் உதவியுடன் மரத்தை வெட்டி, கட்டைகளை இணைத்து குடியிருக்க வீடுயொன்றை உருவாக்கி அதில் வசித்து வருகிறேன். இங்கு வசிப்பது இயற்கையுடன் இணைந்து வாழ்வது போல் இருக்கிறது. இங்கு தூய்மையாகவும் உள்ளது. வீட்டில் இருந்தே உணவு வந்துவிடும்" என்கிறார் இந்த தற்காலிக மரவாசி.