இந்தியா

ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

JustinDurai

ஹத்ராஸ் இளம்பெண் உயிரிழப்பு தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில பொது நல மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. ஹத்ராஸ் விவகாரத்தை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரிக்க உத்தரவிட வேண்டுமென இம்மனுக்களில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் இவ்விசாரணையை உத்தரப் பிரதேசத்திற்கு வெளியே மாற்ற வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க கால வரம்பை நிர்ணயிக்கவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது

இதற்கிடையே ஹத்ராஸ் நிகழ்வை வைத்து சாதி மோதல்களை தூண்டுவதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றதா என்பதை அமலாக்கத்துறை விசாரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக லக்னோ மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங் தெரிவித்தார்.

ஹத்ராஸ் பெண் குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தருவோம் என வலைத்தளம் ஒன்று தொடங்கப்பட்டதாகவும் இது சாதி மோதல்களை தூண்டி விட பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை வழக்கு பதிந்துள்ள நிலையில் இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தாங்கள் ஆராய உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது