சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கான முக்கியமான ஒரு முன்னெடுப்புதான், ‘கட்டாய ஹெல்மெட்’..
இதுதொடர்பாக, உத்தரப்பிரதேச போக்குவரத்து ஆணையர் பிஎன்சிங் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இரு சக்கர வாகன ஓட்டிகளின் சாலை விபத்துக்களில் பெரும்பாலான இறப்புகள் ஹெல்மெட் பயன்படுத்தாததால் ஏற்படுகின்றன. இந்த கொள்கையானது உயிர்களைக் காப்பாற்றுவதையும் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனவே ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது; அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்; ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி வந்தால், அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும்.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொள்கை ஏற்கனவே கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், அவ்வப்போது கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. எனவே, இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் , இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக சமூக வலைதளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.” என்று எழுதியுள்ளார்.
சாலை விபத்துக்களைக்குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மணீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மோட்டார் வாகன சட்டம் 1988 இன் பிரிவு 129 யின் படி, இருசக்கர வாகனம் ஓட்டுபவர், அதில் சவாரி செய்பவர்கள் என அனைவரும் ஹெல்மெட் அணியவேண்டும். இதனை மீறுபவர்களுக்கு சட்டப்பிரிவு 177 இன்படி, தண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.