uttar pradesh
uttar pradesh pt web
இந்தியா

காலணியை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த கொடூரம்; உ.பி.யிலும் அரங்கேறிய அவலம்

Angeshwar G

கடந்த சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின இளைஞர் முகத்தில் பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்து அவமதித்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அந்த இளைஞரை நேரில் வரவழைத்து அவருக்குப் பாத பூஜை செய்து மன்னிப்புக் கோரினார்.

இருப்பினும் அதன்பின் (ஓரிரு தினங்கள் முன்) செய்தியாளர்களை சந்தித்த பழங்குடியின இளைஞர் தஸ்மத் ராவத், “இப்போது என் வீட்டின் முன்பு போலீசார் உள்ளனர், ஆனால் இது ஒன்றிரண்டு நாட்களுக்கு மட்டுமே. அதன்பின் அவர்கள் என்னை கடத்தினாலோ அல்லது தாக்கினாலோ நான் என்ன செய்வது? அரசாங்கத்திடம் நான் கேட்பது எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு மட்டுமே. இந்தச் சம்பவத்தைப் பற்றி நான் புகார் செய்யவில்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்தேன். பிரவேஷ் சுக்லா பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நான் ஒன்றும் சொல்லவில்லை” என்றார்.

மேலும், “தவறு நடந்துவிட்டது தான். நான் அரசாங்கத்திடம் அவரை விடுவிக்க கேட்டுக்கொள்கிறேன். பர்வேஷ் சுக்லா தன் தவறை உணர்ந்துவிட்டார். அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட்” என்றும் தெரிவித்தார்

இந்நிலையில் மத்திய பிரதேச நிகழ்வைப் போன்றே உத்தர பிரதேசத்திலும் தலித் ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவர் தனது மாமாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞர் அதை சரி செய்ய முயல, அங்கு வந்த மின்துறை ஒப்பந்த ஊழியர் அதைக் கண்டு கடும் கோபம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இளைஞரின் சாதிப் பெயரைக் கூறி திட்டி கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். தொடர்ந்து அந்த ஊழியர், இளைஞரை தனது காலணியை நாக்கால் சுத்தம் செய்ய வைத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞர் காவல்துறையில் அது குறித்து புகாரளித்தார். அவர் கூறுகையில், “கடந்த ஆறாம் தேதி எனது உறவினர் வீட்டில் மின் தடை ஏற்பட்டு இருந்தது. அதை சரி செய்ய முயன்ற போது மின் துறையின் ஒப்பந்த ஊழியரான தேஜ்பாலி சிங் அங்கு வந்தார். என்னிடம் சாதிப் பெயரை கூறி திட்டி தகராறில் ஈடுபட்டு அவரது காலணியையும் நாக்கால் சுத்தம் செய்ய வைத்தார்” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேஜ்பாலி சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “மத்திய பிரதேச நிகழ்வைப் போல உத்திர பிரதேச நிகழ்வும் வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் தலித் மக்கள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.