இந்தியா

உ.பி: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் தரித்த 15 வயது சிறுமி உயிரிழப்பு

JustinDurai

பாலியல் வன்கொடுமை காரணமாக கர்ப்பம் தரித்த 15 வயது சிறுமி உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபதேஹ்கஞ்ச் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒரு கிராமத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 15 வயதான ஒரு சிறுமியை 30 வயதான ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் அந்த நபர் இங்கு நடந்ததை வீட்டில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் அச்சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் இதைப்பற்றி தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகி உள்ளார். கர்ப்பமான 6 மாதங்களுக்குப் பிறகு, அதாவது கடந்த டிசம்பர் மாதத்தில், சிறுமியின் உடல் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த அவரது பெற்றோர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்த பிறகே, 6 மாதங்களுக்கு முன்பு ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தததை அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஃபதேஹ்கஞ்ச் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டார். ஆனால் கரு ஆனது 28 வாரங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதால் இனி அதைக் கலைக்க முடியாது என்றும் அவ்வாறு கருக்கலைப்பு செய்தால் சிறுமியின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுமியின் கருவை கலைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்தது. இதையடுத்து சிறுமியை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.