இந்தியா

சினிமா நகரமாகும் உ.பி! களத்தில் இறங்கிய முதல்வர் யோகி-பாலிவுட் நட்சத்திரங்களுடன் சந்திப்பு

webteam

மும்பையில் பாலிவுட் பிரபலங்களுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதை விளம்பரத்தும் நோக்கில், இரண்டு நாள் பயணமாக மும்பை சென்ற உத்தரப்பிரதே மாநில  முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு முதலீட்டாளர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், கோரக்பூர் லோக்சபா எம்.பியும், நடிகருமான ரவி கிஷன், போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிருவா, பின்னணி பாடகர்கள் சோனு நிகாம், கைலாஷ் கெர், நடிகர் சுனில் ஷெட்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்திரபிரகாஷ் திவேதி, மதுர் பண்டார்கர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு  பேசிய யோகி, ’உங்கள் திரையுலக உறுப்பினர் இருவரை நாங்கள் எம்.பிக்களாக மாற்றியுள்ளோம். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுக்குத் தெரியும்.

சமூகத்தை ஒன்றிணைப்பதிலும், பாதுகாப்பதிலும் சினிமா முக்கியப் பங்கு வகிக்கிறது. உத்தரப்பிரதேசம் திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஆகியவற்றிலும் உத்தரப்பிரதேசம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இங்கு, வெப் சீரிஸ் படமாக்கினால் 50 சதவீத மானியம் வழங்கப்படும். திரைப்பட ஆய்வகங்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் அமைக்க 25 சதவீத மானியம் வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

- ஜெ.பிரகாஷ்