இந்தியா

வாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கேட்டறிந்தார் பிரதமர் மோடி

jagadeesh

வாரணாசி தொகுதியில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்

உத்தரப் பிரதேசத்தின் தனது தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மாவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். வாரணாசி தொகுதியில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அப்போது கேட்டறிந்தார்.

மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக முகக் கவசங்களை உருவாக்குவதில் பாஜக உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த ஹன்ஸ்ராஜிடம் மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்குமே முகக் கவசம் அவசியம் என மோடி தெரிவித்தார். மேலும் முகக் கவசங்களை தயாரிப்பதில் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்காமல் துண்டு அல்லது கைக்குட்டையை மக்கள் பயன்படுத்தலாம் என பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 400ஐ தாண்டியது. 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 364 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளனர். 125 பேர் குணமடைந்துள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.