அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் கலந்துரையாடினார்.
அப்போது நியாயமான இரு தரப்பு வர்த்தக உறவுகள் குறித்து பிரதமர் மோடியிடம் ட்ரம்ப் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது இந்த உரையாடலின்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், தனது நண்பரான டொனால்டு ட்ரம்புடன் உரையாடியது மகிழ்ச்சியை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்பிற்கு, வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
நம்பகத்தன்மை உடைய மற்றும் இருதரப்பும் பலன்பெறும் வகையிலான இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இருநாட்டு மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்காகவும் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா வாங்குவதன் அவசியம் குறித்தும் நியாயமான இரு தரப்பு வர்த்தக உறவுகளை நோக்கி செல்வது குறித்தும் பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் இந்தோ - பசிபிக் மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் விவாதித்ததாகவும் இப்பேச்சு பயனுள்ளதாக இருந்ததாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக ஏற்கனவே ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் தற்போது நியாயமான வர்த்தகம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது