இந்தியா

“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்

webteam

சொந்த காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தனது ராஜினாமா குறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில சொந்த காரணங்களால் நான் வகித்த பதவியிலிருந்து உடனே விலகுவது என முடிவு செய்துள்ளேன்.

சில வருடங்கள் இந்தியாவின் ரிசர்வ் வங்கிக்காக சேவை புரிந்ததை எனது பாக்கியமாகவும், பெருமிதமாகவும் நினைக்கிறேன். ரிசர்வ் வங்கியின் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவால் வங்கிகளை சரியாக வழிநடத்தி குறுகிய வருடங்களிலேயே சாதனை படைக்க முடிந்தது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக, எனது சக ஊழியர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் மத்திய ஆணைய இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அனைவரது எதிர்காலமும் சிறப்பாக அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் வலுத்து வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமாக செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதுதான் மோதலுக்கு முதல் காரணமாகவும் சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்தியில் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்த மோதல் போக்கில் சமரசம் ஏற்பட்டது. அத்துடன் ரிசர்வ் வங்கி கையிருப்பு வைத்திருக்க வேண்டிய உபரி தொகை குறித்து முடிவு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருப்பது இந்திய அளவில் பொருளாதார மற்றும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.