பாஜகவை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், பெங்களூரு பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா மீது பரபரப்பு கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
இந்த புகாரில், தன் மீது பொய்யாக சுமத்தப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா, தன்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்திருந்ததாகவும் இவரை நம்பி அலுவலகத்திற்கு சென்றதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார் .
அந்த அலுவலகத்தில் வைத்து முனிரத்னா தனது கூட்டாளிகளோடு சேர்ந்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்போது தனது முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், ” அதுமட்டுமல்லாமல் என் மீது ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார்கள். பிறகு இது பற்றி வெளியே சொன்னால் உனது மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டினார்கள். இதனைத் தொடர்ந்து எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
அப்போது மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத வைரஸ் தொற்று உடலில் பரவி இருப்பதாக கூறினார்கள். பிறகு நான் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன். என்னைச் சீரழித்த முனிரத்னா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என காவல் நிலையத்தை நம்பி வந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக எம் எல் ஏ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 டி (கும்பல் பலாத்காரம்), 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றைப் பரப்பும் தீங்கிழைக்கும் செயல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 354 (ஒரு பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம்), 504 (அவமதித்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்), 509 (ஒரு பெண்ணை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் )வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முனிரத்னா மீது 2020,2022,2024 ஆம் ஆண்டுகளிலும் பல பாலியல் புகார்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.