இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: 7-வது இடம் பிடித்த தமிழக மாணவர்

webteam

நாட்டின் உயரிய பணியாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு தேர்வில் 829 தேர்வர்கள் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜத்தீன் கிஷோர் மற்றும் பிரதிபா வர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முதல் பத்து பேர்களில் மூன்று பெண்களும் உள்ளனர்.  இதில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் அகில இந்திய அளவில் 7ம் இடம் பிடித்து தேர்வாகியுள்ளார். இவர் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற 829 பேரில் 304 தேர்வர்கள் பொதுப்பிரிவினர். பொருளாதார நிலையில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் 78, ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 251,  பட்டியலினத்தவர்கள் 129 மற்றும் பழங்குடிப் பிரிவினர் 67 என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

சிவில்  சர்வீஸ் பணிகளில் 927 காலியிடங்கள் உள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் 438 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஐஏஎஸ் பணிகளில் 180, ஐபிஎஸ் பணிகளில் 150 மற்றும் ஐஎப்எஸ் பணிகளில் 24 காலியிடங்கள் உள்ளன.