மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 107 கோடியைத் தாண்டியுள்ளது. இது, இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளது என்றே சொல்லலாம். இதன்மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டிஜிட்டல் பொருளாதாரம் மட்டுமே தற்போது 12% முதல் 14% வரை பங்களிப்பு செய்கிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் வளர்ச்சி பெருகி வருகிறது. குறிப்பாக, பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பரவியுள்ளது. இது, இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்துள்ள அசுர வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் புதிய சாதனையை எட்டியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 107 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் அதிவேக இணையத்தைப் பயன்படுத்தும் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடியை எட்டியுள்ளது.
அதேபோல், நாட்டின் சுமார் 97% கிராம ஊராட்சிகள் (2.15 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துகள்) ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, கிராமப்புற மக்களுக்கும் டிஜிட்டல் சேவைகள் தடையின்றிக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் நடைபெறும் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 49% பங்களிப்பை இந்தியா மட்டுமே கொண்டிருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. தவிர, தற்போதைய நிலவரப்படி, ஒருநாளைக்குச் சராசரியாக 75 கோடிப் பரிவர்த்தனைகள் UPI மூலம் தடையின்றி நடைபெறுவதாகவும், சர்வதேச நாணய நிதியம் (IMF) இதனை உலகின் மிகப்பெரிய நிகழ்நேர கட்டண முறைமை என்று பாராட்டியிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் இந்த தொழில்நுட்பம், எல்லைகளைத் தாண்டி தற்போது கம்போடியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), இலங்கை உள்ளிட்ட 9 நாடுகளில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில், அரசின் நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைவதில் இந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளது. அத்துடன், சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் 'டிஜிலாக்கர்' தளம் 70 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு அதிவேகமாக வளர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டிஜிட்டல் பொருளாதாரம் மட்டுமே தற்போது 12% முதல் 14% வரை பங்களிப்பு செய்கிறது.