இந்தியா

இஸ்லாமிய மதகுருவை கட்டாயப்படுத்தி ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாக புகார் - இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு

rajakannan

உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதபோதகரின் தாடியை பிடித்து இழுத்ததோடு, அவரை கட்டாயப்படுத்தி ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாக 12 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியின்படி, முசாபர் நகர் பகுதியைச் சேர்ந்த இமாம் இம்லக்-உர்-ரெஹ்மான் தன்னுடைய கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 12க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இளைஞர்கள் தன்னுடைய தாடியை பிடித்து இழுத்ததுடன், ஜெய்ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் குமார் பாண்டே கூறுகையில், “முதல்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மதபோதகர் அளித்த புகாரின் அடிப்படையில் 12 இளைஞர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க ரெஹ்மான் சத்தமிட்டுள்ளார். அந்த வழியாக வந்த அவரது கிராமத்தைச் சேர்ந்த இருவர் இளைஞர்களிடம் இருந்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த இமாம் இதற்கு முன்பும் இதேபோல் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் உண்மை என்பது அப்போது நிரூபிக்கப்பட்டது” என்றார்.