இந்தியா

வாட்ச்-க்கு பதில் மாட்டு சாணத்தை அனுப்பிய ஃப்ளிப்கார்ட்: Open Box delivery பற்றி தெரியுமா?

JananiGovindhan

இ-காமர்ஸ் தளங்களின் பண்டிகை கால சலுகைகளால் பயனடைந்தவர்களை காட்டிலும் நொந்துப்போனவர்களே ஏராளமானோர் இருப்பார்கள் என்பது தொடர்ந்து நிலவும் குளறுபடிகள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களையோ அல்லது தரமற்ற பொருட்களையோ, சம்பந்தமே இல்லாத பொருட்களையோ டெலிவரி செய்து வருவதாக பிரபல இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் 1,304 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் COD முறையில் ஆர்டர் செய்திருந்தார்.

அந்த வாட்ச் ஒன்பது நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 7ம் தேதிதான் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வாட்சை நீலம் தன்னுடைய சகோதரர் ரவேந்திராவுக்காக ஆர்டர் செய்திருந்தார்.

டெலிவரி செய்யப்பட்ட வாட்சை பார்ப்பதற்காக ஆர்வமாக பார்சலை பிரித்து பார்ந்த ரவேந்திராவுக்கு அதிர்ச்சியே காத்திருந்திருந்தது. ஏனெனில் அதில் வாட்சுக்கு பதில் மாட்டு சாணத்தால் ஆன 4 வறட்டிகளே இருந்திருக்கிறது. அதன் பிறகு ஆர்டரை டெலிவரி செய்தவரை அழைத்து உடனடியாக ரிட்டர்ன் செய்ததோடு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றிருக்கிறார்கள்.

இப்படியான குழப்பங்களில் இருந்து தப்பிப்பதற்காகவே ஃப்ளிப்கார்ட்டில் Open Box Delivery என்ற அம்சமும் உள்ளது. இது முற்றிலும் இலவசமான சேவையாக இருந்தாலும் மொபைல், லேப்டாப் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே இந்த சேவையை பயன்படுத்தலாம் என்றும், ஆர்டர் செய்யும் போதே Ekart மூலம் டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமாம்.

அதன்படி, நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் Open box deliveryக்கு ஒத்துப்போனால் செக் அவுட் செய்யும் போது அதனை pincode கொடுத்து தேர்வு செய்துக்கொள்ளலாம்.

OPEN BOX DELIVERY பற்றிய முழு விவரம் காண: க்ளிக் செய்க

டெலிவரி செய்யும் முன்பு ஃப்ளிப்கார்டிடம் இருந்து Open Box Deliveryக்கான OTP அனுப்பப்படும். அதனை டெலிவரி ஊழியரிடம் கொடுத்து பின்னர் ஆர்டர் செய்த பொருளை கஸ்டமரும் ஊழியரும் பிரித்து பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

ஒருவேளை டெலிவரி செய்யப்பட்ட பொருளில் திருப்தியில்லாவிட்டாலோ அல்லது உடைந்திருந்தாலோ டெலிவரி ஊழியரிடமே திருப்பி கொடுத்துவிடலாம். அதன் பிறகு நீங்கள் மேற்கொண்ட ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டு அதற்கான பணமும் திருப்பி செலுத்தப்பட்டுவிடும்.