இந்தியா

”பக்தியும் இருக்கு ப்ரியமும் இருக்கு..” - மகளின் முடிவுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்!

JananiGovindhan

ஒருதார மணம், பலதார மணம் மற்றும் தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்வது என பல முறைகள் உலகில் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், 30 வயதான பெண் ஒருவர் இந்துக்களின் கடவுளாக கருதப்படும் கிருஷ்ணனின் சிலைக்கு மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

இதனை அப்பெண்ணின் பெற்றோர்களே முன்னின்று நடத்தியும் வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆவ்ரியாவில் அண்மையில் நடந்திருக்கிறது. குறிப்பாக சாதாரணமாக நடக்கும் திருமணத்தில் இடம்பெறும் இசைக்கச்சேரிகளும் இந்த திருமணத்தில் இடம்பெற்றிருந்ததாம்.

ஆவ்ரியாவை சேர்ந்த ரக்‌ஷா என்ற 30 வயது பெண் முதுகலை பட்டம் படித்துவிட்டு, சட்டப்படிப்புக்கான LLB பட்டத்தையும் படித்துக் கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே கிருஷ்ணர் மீது அதீத பக்தியும், ப்ரியமும் கொண்டிருந்திருக்கிறார் ரக்‌ஷா.

ஆகையால் வைணவ புராண கதைகளில் வரும் ஆண்டாளை போல கிருஷ்ணர் மீது பற்றுக்கொண்ட ரக்‌ஷா கடந்த ஆண்டு ஜூலையில் தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட ரக்‌ஷாவின் பெற்றோர் அவரை மதுராவில் உள்ள பிருந்தாவனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டின் பேரில் சுக்செயின்பூரில் உள்ள உறவினரின் வீட்டில் வைத்து ரக்‌ஷா கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், கிருஷ்ணர் சிலையை மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் ரக்‌ஷா.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய ரக்‌ஷா, “இருமுறை என்னுடைய கனவில் வந்த கடவுள் கிருஷ்ணர் எனக்கு மாலை அணிவித்தார்” என்று கூறியிருக்கிறார். இதேபோல பேசிய ரக்‌ஷாவின் மூத்த சகோதரி அனுராதா, “அனைவருமே இந்த திருமணத்தில் பங்கேற்றோம். எல்லாம் கடவுளின் பிரார்த்தனையோடு நடைபெற்றது. ரக்‌ஷாவின் முடிவில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்திருக்கிறார்.