உத்தரப் பிரதேச அரசு சமீபத்தில் கொண்டு வந்த ‘லவ் ஜிகாத்’ சட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமணத்துக்காக நேர்மையற்ற முறையில் மதம் மாறுவதையும், இந்துப் பெண்களைக் காக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை உத்தரப் பிரதேச அரசு கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி கொண்டுவந்தது.
இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகவும் கருதப்படும்.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், முதல் வழக்கு பரேலியில் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் டிசம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து எட்டா பகுதியில் இருந்து 8 பேரும், சீதாபூரிலிருந்து 7 பேரும், கிரேட்டர் நொய்டாவிலிருந்து 4 பேரும், ஷாஜகஹான்பூர் மற்றும் அசாம்கரைச் சேர்ந்த தலா 3 பேரும், மொராதாபாத், முசாபர்நகர், பிஜ்னோர் மற்றும் கண்ணாஜ் ஆகிய பகுதிகளிலிருந்து தலா 2 பேரும், பரேலி மற்றும் ஹார்டோயிலிருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 12 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, ம.பி.யிலும் இந்த சட்ட மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. அதுகுறித்த முழு விவரம் > 10 ஆண்டுகள் வரை தண்டனை... கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் மசோதா: மபி அமைச்சரவை ஒப்புதல்