சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி ANI
இந்தியா

உ.பி | சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தல்.. சாமியார் மீது FIR பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் மீது சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

Premkumar S

உத்தரபிரதேச மாநிலம் வாராணாசியில் பிரபல சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி ”வித்யா மடம்” என்ற ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுவர்களிடம் சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவரான அசுதோஷ் பிரம்மச்சாரி மகாராஜ் என்பவர் பிரக்யராஜ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி

ஆனால், காவல்துறையினர் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அசுதோஷ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் ஆசிரமத்தில் இருக்கும் சிறுவர்களை மடத்தின் 5-வது மாடியில் வைத்து பாலியல் சுரண்டலில் ஈடுபட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அசுதோஷ் சமர்ப்பித்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்று, பிரக்யராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தக் கோரி காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, சாமியார் அவரது சீடர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பிரக்யராஜ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், உத்தரபிரதேசத்தில் ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.