சங்கூர் பாபா என்.டி.டிவி.
இந்தியா

உ.பி. | மதமாற்ற கும்பலின் தலைவர்.. 40 கணக்குகளில் ரூ.106 கோடி.. யார் இந்த சங்கூர் பாபா?

மதமாற்றக் கும்பலின் மூளையாகச் செயல்படும் ஜமாலுதீன் என்கிற சங்கூர் பாபாவுக்கு, 40 வெவ்வேறு கணக்குகளில் ரூ.106 கோடி மதிப்புள்ள நிதி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமாலுதீன் என்கிற சங்கூர் பாபா, ஏழை, ஆதரவற்ற தொழிலாளர்கள், பலவீனமான பிரிவினர் மற்றும் விதவைப் பெண்கள் ஆகியோரை வற்புறுத்தி மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைத்துள்ளதாகக் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் மதமாற்ற மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டபோது, சங்கூர் பாபாவும் வெளிச்சத்திற்கு வந்தார்.

இதுவரையான விசாரணையில், அவரது 40 வெவ்வேறு கணக்குகளில் ரூ.106 கோடி மதிப்புள்ள நிதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணம் அனைத்தும் மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்தக் கும்பலுக்கு ஏதேனும் பயங்கரவாதத் தொடர்புகள் உள்ளதா என்பதையும் உ.பி. பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) விசாரித்து வருகிறது.

மறுபுறம், பிர் பாபா என்றும் அழைக்கப்படும் சங்கூர் பாபாவின் வருவாயைக் கண்டறிய அமலாக்க இயக்குநரகம் (ED) ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளது. யார், என்ன காரணங்களுக்காக அவருக்கு பணம் அனுப்பினார்கள் என்பதை நிறுவனம் விசாரித்து வருகிறது. சங்கூரின் சட்டவிரோத வேலைகளில் உதவியதாகக் கூறப்படும் முகவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்பில் உள்ள ஊழியர்களும் பாதுகாப்பு நிறுவனங்களின் கண்காணிப்பில் உள்ளனர். அவர் எத்தனை பேரை மதம் மாற்றினார், அவர் பெற்ற பணம் தேச விரோத நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் நிறுவனங்கள் விசாரித்து வருகின்றன.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், “ குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜமாலுதீனின் செயல்பாடுகள் சமூகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் எதிரானவை என்பதை ஆரம்ப விசாரணை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் எந்தவிதமான கருணையும் இருக்காது. குற்றம்சாட்டப்பட்டவர்களுடைய சொத்துக்கள் மற்றும் அவரது கும்பலுடன் தொடர்புடைய பிற நபர்களும் கைது செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சங்கூர் பாபா?

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரெஹ்ரா மாஃபி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கூர் பாபா. இவருடைய முழு சாம்ராஜ்யமும் தற்போது நேபாள எல்லையில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தின் உத்தரௌலா பகுதியில் உள்ளது. ஆரம்பத்தில் தனது சைக்கிளில் மோதிரங்கள் மற்றும் தாயத்துக்களை விற்று வந்தார். பின்னர் அவர், தனது சொந்த கிராமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தனது தற்போதைய உதவியாளரான நீதுவைச் சந்தித்த பிறகு, ரெஹ்ரா மாஃபி கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்பூரில் உள்ள ஒரு தர்காவிற்கு அடுத்த நிலத்தில் ஒரு கட்டடத்தைக் கட்டினார். இருப்பினும், அரசாங்க விசாரணையில் அந்தக் கட்டடம் சட்டவிரோதமானது என்று கண்டறியப்பட்டது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் அந்த கட்டுமானத்தை, அதிகாரிகள் இன்று புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். அதில் அவருடைய குடும்பத்தினர் ஒரு பகுதியில் வசிக்க, மற்றொரு பகுதி வெறுமனே கிடந்துள்ளது. அதற்கு இரண்டு நாய்களும், 15 சிசிடிவி கேமராக்களும் காவலுக்கு இருந்துள்ளன.

சங்கூர் பாபா

ஆனால் அந்தக் கட்டடம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக, பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை எதற்கும் பயன்படுத்தப்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. பால்ராம்பூர் கட்டடத்தைத் தவிர, சங்கூர் பாபாவுக்கு பல இடங்களில் பல சொத்துக்கள் இருக்கின்றன. இந்த சொத்துக்களில் ஒன்று மகாராஷ்டிராவின் லோனாவாலாவில் உள்ளது. இது சங்கூர் பாபா மற்றும் நவீன் ஆகியோரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2, 2023 ஆவணங்களின்படி இந்த நிலத்தின் விலை ரூ. 16.49 கோடி ஆகும். சங்கூர் பாபாவுக்கு நிதி அனுப்பியதாக கண்டறியப்பட்டதால், அஹ்மத் கானும் விசாரணையில் உள்ளார். ஜமாலுதீனுக்கு மேற்கண்ட நிலத்தை விற்ற அதே நபரா இந்த அகமது கான் என்பது குறித்து இப்போது விசாரிக்கப்படுகிறது.