பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணையை உத்தரபிரதேச போலீசார் தொடங்கியுள்ளனர்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் மாணவிகள், பத்திரிக்கையாளர் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனை தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உத்தரப்பிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், நீதி விசாரணை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
போலீசார் பல்கலைக் கழக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதோடு, சம்பவம் நடந்த அன்று அருகில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களையும் ஆய்வு செய்கின்றனர்.