இந்தியா

ஜன்னல் வழியே பாய்ந்து வந்த இரும்பு கம்பி - ரயிலில் அமர்ந்தபடியே உயிரிழந்த பயணி

Sinekadhara

ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து பயணித்தபோது எங்கிருந்தோ வந்த இரும்பு கம்பி கழுத்தில் குத்தியதில் பயணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி - கான்பூர் வரை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. காலை 8.45 மணியளவில் உத்தர பிரதேச மாநிலம், வடக்கு மத்திய ரயில்வேயின் எல்லைக்கு உட்பட்ட பிரக்யராஜ் டிவிஷனில், தான்வார் - சோம்னாவுக்கு இடைபட்ட பகுதியில் ரயில் சென்றுகொண்டிருந்தது. அதில் பொது வகுப்பு பெட்டியில் ஜன்னலோரம் அமர்ந்து பயணித்துள்ளார் ஹிரிஷ்கேஷ் துபே என்ற நபர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக கண்ணாடியை உடைத்து உள்ளே ஊடுருவி வந்த இரும்பு கம்பி ஒன்று துபேவின் கழுத்தில் குத்தி கிழித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கம்பியின் நீளம் 5 அடி விட்டம் 1.5 இன்ச் எனத் தெரிகிறது. மேலும், அது ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தக்கூடிய கம்பி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, அலிகார் ரயில்நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, இறந்த நபரின் உடல் அரசு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி கூறுகையில், “ரயில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த இரும்பு கம்பி குத்தியதில் பொதுவகுப்பில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அலிகார் ஜங்க்‌ஷனில் ரயில் 9.23 மணியளவில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரயில் தண்டவாள வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை” என்று கூறினார். மேலும், இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.