Gulab Yadav
Gulab Yadav Twitter
இந்தியா

ரமலானில் முஸ்லிம்களுக்காக 48 ஆண்டுகளாக இந்து விவசாயி செய்யும் சேவை: யார் இந்த குலாப்?

Janani Govindhan

சக மனிதரை மதித்து, மனிதத்தை போற்றுவதே மதமாக இருக்கும் என சொல்வதுண்டு. அந்த பேச்சுக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார் வாரணாசியைச் சேர்ந்த குலாப் யாதவ்.

மத நல்லிணக்கத்தை போற்றும் இந்தியாவில் சமீபகாலமாக இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர்களுக்கு எதிராக பல நெருக்கடிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இப்படியான சூழலில், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல இந்து விவசாயியொருவர் செயல்படுகிறார்.

நெசவாளியும் விவசாய கூலியுமான குலாப் யாதவ் என்பவர், ரமலான் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களை, அவர்கள் அதிகாலையில் நடத்தும் சஹர் மற்றும் தொழுகைக்காக தினமும் எழுப்பிவிடுகிறார். இதற்காக நாள் தவறாது கண்விழித்து சேவையாற்றி வருகிறார் குலாப்!

Gulab Yadav - குலாப் யாதவ்

யார் இந்த குலாப் யாதவ்?

உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தின் முபாரக்புர் பகுதியில் உள்ள கெளடியா கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த குலாப் யாதவ். இந்த கெளடியா கிராமத்தில் 4,000 இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்துக்கள் சுமார் 200 பேர்தான் இருக்கிறார்கள். இருப்பினும் எந்த பாகுபாடும் இல்லாமல், இந்து முஸ்லிம் என்பதையெல்லாம் தாண்டி அனைவரும் மத நல்லிணக்கத்தை பேணி வாழ்ந்து வருகிறார்கள்.

Gulab Yadav - குலாப் யாதவ்

அந்த நல்லிணக்கத்துக்கு சான்றாக ஒவ்வொரு ஆண்டும் வரும் ரமலான் மாதத்தின் போது நோன்பிருக்கும் இஸ்லாமியர்களை அதிகாலையில் எழுப்பும் சேவையை குலாப் யாதவ்வும் அவரது குடும்பத்தாரும் கடந்த 48 ஆண்டுகளாக தவறாது செய்து வருகிறார்கள்.

குலாபின் தந்தை சிர்கித் யாதவ் இந்த தன்னலமற்ற சேவையை கடந்த 1975ம் ஆண்டு தொடங்கினாராம். அது முதல் ஒவ்வொரு ரம்ஜானுக்கும் இதை அவரது குடும்பத்தினர் பின்பற்றி வருகிறார்களாம்.

ரமலான் மாதம் வந்துவிட்டால் நள்ளிரவு 1 மணிக்கு அலாரம் வைத்தார் போல விழிக்கும் குலாப் யாதவ், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்களின் வீடுகளுக்கும் சென்று கதவை தட்டி, டார்ச் அடித்து எழுப்பி விடுவார். இதனால் அதிகாலை நோன்பு வைக்கும் இஸ்லாமியர்கள் சஹர், தொழுகைக்கு தயாராவார்கள்.

Gulab Yadav - குலாப் யாதவ்

இந்த சேவையை செய்வது தனக்கு மன நிறைவையே தருவதாக குலாப் யாதவ் பல ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அக்கிராமத்து இஸ்லாமியர்கள், “குலாப் எங்கள் குடும்பத்தில் ஒருவர்” , “குலாப் செய்வது மிகவும் பாராட்டத்தக்க செயல். குலாப் இருப்பதால் ஒருநாளும் நாங்கள் சஹர், தொழுகைக்கான அழைப்புகளை தவறவிட்டதே இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், “குலாப் யாதவின் இந்த சுயநலமற்ற சேவையை அங்கீகரத்து அதனை இந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும்” என டால் பிஹாரி ம்ரிதக் என்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் கூறியிருக்கிறார்.