உத்தரப் பிரதேச மாநிலத்தில் தன்னுடைய மனைவியின் தலையை துண்டித்து அதனை கையில் காவல் நிலையத்திற்கு கணவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் ஜஹன்ஹிராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகதூர்பூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தில் குடும்பத்திற்குள் நிகழ்ந்த சண்டை ஒன்றில் தன்னுடைய மனைவியின் தலையையே அந்த நபர் துண்டித்துள்ளார். மனைவியின் தலையை துண்டித்த கையோடு அதனை கையில் எடுத்துக் கொண்டு அந்த நபர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
காவல் நிலையம் வரை கையில் வெட்டப்பட்ட தலையுடன் நடந்தே சென்றுள்ளார். இதனை கண்டு வழியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே போலீசார் மறித்து அந்த நபரின் கையில் இருந்த துண்டிக்கப்பட்ட தலையை வாங்க முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் திடீரென தேசிய கீதம் பாடியுள்ளார். பாரத் மாதா கி ஜே என்று கத்தியுள்ளார்.
அப்போது, போலீசாருக்கும் அந்த நபருக்கும் இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக போலீசார் அந்த துண்டிக்கப்பட்ட தலையை வாங்கினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பீதியை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, விசாரணையில் அந்த நபர் அகிலேஷ் ராவத் என்பதும் முதலில் மனைவியை கொலை செய்துவிட்டு, பின்னர் தலையை துண்டித்ததும் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.