UP man self operates after watching YouTube PT
இந்தியா

உ.பி. | 11 தையல்கள்.. யூட்யூப் பார்த்து தனக்குதானே அறுவை சிகிச்சை.. விபரீத முடிவால் ஊசலாடும் உயிர்!

தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்யும் முடிவை எடுத்த ராஜா பாபு, மருந்தகத்திற்கு சென்று அதற்கான உபகரணங்களை வாங்கி வந்துள்ளார்.

Rajakannan K

அந்த அறையில் இருந்து அலறல் சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. அறையில் இருந்த ராஜா பாபு வலியால் துடித்துள்ளார். உள்ளே வந்து பார்த்த அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவர்களால் அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. ராஜா பாபுவின் வயிற்றில் ஏதோ தையல்கள் போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பிறகு என்ன நடந்தது என ராஜா பாபு விவரித்ததை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் சுன்ராக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா பாபு (32). இவருக்கு சமீப காலமாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக சில மருத்துவர்களை அணுகியுள்ளார். ஆனாலும் அவருக்கு வலி சரியாகவில்லை. வலி குறையாததால் விபரீத முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.

விபரீத முடிவு!

ஆம், யூட்யூப் வீடியோக்களை பார்த்த அவர் தன்னுடைய வயிற்று வலி பிரச்சனைக்கு தானே தீர்வு காணும் முடிவை எடுத்துள்ளார். தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்யும் முடிவை எடுத்த ராஜா பாபு, மருந்தகத்திற்கு சென்று அதற்கான உபகரணங்களை வாங்கி வந்துள்ளார்.

யூட்யூப்களில் தான் பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்துள்ளார். மயக்க மருந்து எடுத்துக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்து முடித்து 11 தையல்கள் போட்டுள்ளார். ஆனால், மயக்க மருந்தின் வீரியம் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு கடுமையான வலியை உணர்ந்துள்ளார்.

மோசமான வலி!

அறுவை சிகிச்சைக்கு முன்பு இருந்ததைவிட நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. அதனால் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முன்னதாக, 18 வருடங்களுக்கு முன்பு ராஜா பாபுவிற்கு அப்படீக்ஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் காரணமாகவே கடந்த சில தினங்களாக வயிற்று வலி இருந்து வந்ததாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். நிலைமை மோசமாக இருந்ததன் காரணமாக ஆக்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

யூட்யூப் பார்த்து தனக்கு தானே ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.