இந்தியா

50 முட்டைகள் போட்டி: 42-வது முட்டையை சாப்பிட்ட போது மயங்கிய இளைஞர், உயிரிழப்பு!

50 முட்டைகள் போட்டி: 42-வது முட்டையை சாப்பிட்ட போது மயங்கிய இளைஞர், உயிரிழப்பு!

webteam

நண்பர் வைத்த போட்டியில் 41 முட்டைகளை தின்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் (42). இவர் தனது நண்பருடன் பிபிகஞ்ச் மார்க்கெட்டுக்கு நேற்று சென்றார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ’50 முட்டைகளை உடனடியாகச் சாப்பிட முடியுமா?’ என்று கேட்டார் நண்பர். ’ஏன் முடியாது?’ என்றார் சுபாஷ். ’சவாலா?’ என்றார் நண்பர். ’ம்’ என்றார், அவர். 50 முட்டைகளை தின்றால் இரண்டாயிரம் ரூபாய் பெட் என்று முடிவு செய்தார்கள். 

பிறகு ஒவ்வொரு முட்டையாக உடைத்து வாயில் ஊற்றினார் சுபாஷ். 41-வது முட்டையை உடைத்து உள்ளே தள்ளிய சுபாஷூக்கு அதற்கு பிறகு தலை சுற்றுவது போல இருந்தது. 42 வது முட்டையை உடைத்து வாயில் ஊற்றும்போது தடுமாறி பொத்தென்று விழுந்தார். சுயநினைவில்லை. பதற்றமான நண்பர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சுபாஷைத் தூக்கிச் சென்றனர்.  அவர்கள், வேறு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லுமாறு கூறினர். கொண்டு சென்றனர். சில மணி நேரங்களிலேயே சுபாஷ் அங்கு உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.