இந்தியா

ட்ரக் - பைக் விபத்தில் 3.5 கி.மீக்கு இழுத்துச்செல்லப்பட்ட உ.பி பெண்! தொடரும் மரணங்கள்

நிவேதா ஜெகராஜா

உத்தரப்பிரதேசத்தில் பெண் அரசு ஊழியரொருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது ட்ரக் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அவர் வாகனம் மோதியதை அறியாமல், குறிப்பிட்ட ட்ரக்கின் ஓட்டுநர் சுமார் 3.5 கிலோமீட்டருக்கு வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார். ஒருகட்டத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தீ எழும்ப தொடங்கியதால், ட்ரக்கும் தீப்பற்ற தொடங்கியுள்ளது. இதன்பின்னரே அந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, ட்ரக் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்தில் இறந்த ஊழியர், உத்தரபிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் அரசு பணியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். விபத்தில் சுமார் 3.5 கிலோமீட்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் அவர்.

உ.பி – டெல்லி இடையேயான பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது மூன்றாவது முறையாகும். முன்னதாக டெல்லியில் சுமார் 12 கி.மீக்கு அஞ்சலி சிங் என்ற பெண் காரின் டயரில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட குரூரம் நடந்திருந்தது.

இதேபோல கௌஷம்பி – நொய்டா இடையேயும் ஒரு சம்பவம் நடந்திருந்தது. அதில் உணவு டெலிவரி செய்யும் ஆணொருவர், தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காரில் இடித்த நிலையில் கிட்டத்தட்ட 1 கி.மீ.க்கு இழுத்துச் செல்லப்பட்டுக்கு இறந்திருந்தார். உ.பி.யின் கௌஷம்பி பகுதியிலேயே மற்றொரு பெண், சுமார் 200 மீட்டருக்கு காரில் இழுத்து செல்லப்பட்டு விபத்துக்குள்ளானார். அங்கிருந்தவர்களால் அவர் பின்னர் காப்பாற்றப்பட்டார்.

இப்படி அப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேர வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.