500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 30 வரை பள்ளிகள் மூடப்படுவதாகவும் அறிவித்திருக்கிறது.
தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் அல்லது 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், பயிற்சி வகுப்புகளையும் மூடவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் பள்ளிகளில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேர்வுகள் தொடரும் என்றும், அலுவலகத்தில் தேவையான பணிகளுக்கு மட்டும் பணியாளர்களை அழைக்கலாம் எனவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ, கான்பூர் மற்றும் வாரணாசி ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 8 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அம்மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 9,085 ஆக உயர்திருக்கிறது. இதுவரை 6,08,853 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாகவும், மாநிலத்தில் 58,801 பேர் கோவிட்19 சிகிச்சை பெற்று வருவதாகவும் உ.பி சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.