இந்தியா

ஒரே நேரத்தில் 25 பள்ளிக்கூடங்களில் சம்பளம் வாங்கிய ஆசிரியை - 1 கோடி சம்பள மோசடி

ஒரே நேரத்தில் 25 பள்ளிக்கூடங்களில் சம்பளம் வாங்கிய ஆசிரியை - 1 கோடி சம்பள மோசடி

webteam

உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆசிரியையின் பெயர் 25 பள்ளிகளில் வேலை செய்வதாக இடம்பெற்று அதன் மூலம் அவர் ரூ.1 கோடி வரை சம்பளமாகப்
பெற்று வந்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரியைச் சேர்ந்த அனாமிகா சுக்லா என்ற ஆசிரியை அங்குள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயா பள்ளியில் முழு நேர ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். ஆனால் அவரது பெயர் இடம்பெற்றது அந்தப் பள்ளியில் மட்டுமல்ல. அனாமிகாவின் பெயர் அலிகார், சகரான்பூர்,பாக்பத், அம்பேத் நகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளில் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர்களுக்கான சம்பளம் டிஜிட்டல் முறைப்படி அவரவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது வழக்கம்.

அப்படி 25 பள்ளிகளிலிருந்தும் அனாமிகாவுக்கு சம்பளம் வந்துள்ளது. கடந்த 13 மாதங்களாக 25 பள்ளிகளிலிருந்து ரூ.1 கோடி வரையில் சம்பளமாகப் பெற்றுள்ளார் அனாமிகா. இது உபி மாநில கல்வித்துறை அதிகாரிகளை பெரும் குழப்பத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தியுள்ளது. எங்கே தவறு நடந்தது என்பது குறித்தும் ஆசிரியைக் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்துப் பேசிய உ.பி. பள்ளிக்கல்வி அமைச்சர் சதீஸ் திவேதி, ஆசிரியை அனாமிகா குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆசிரியை தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு உருவாக்கப்படும் டிஜிட்டல் முறை டேட்டா பேஸால் அனாமிகா சிக்கியுள்ளார். இந்த மோசடி உறுதி செய்யப்பட்டு, அதற்கு அதிகாரிகள் யாரேனும் துணை போயிருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்