ஆரம்பக்கல்வியான எல்.கே.ஜி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை அரசு பள்ளிக்கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா ப்யூல் ரோகில்காந்த் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் தினேஷ் ஷர்மா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆரம்பக்கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக்கல்வியை கொண்டுவரும் திட்டம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். அத்துடன் உத்தரப்பிரத்தின் அரசுப்பள்ளி பொதுத்தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மாணவர்களின் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை இந்த மாதத்தில் வெளியிடப்படும் எனக்கூறிய அவர், திட்டமிட்ட நாட்களுக்குள் சில பாடங்களை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் ஜிஎஸ்டி தொடர்பான படிப்புகளை அடுத்த ஆண்டு முதல் கொண்டுவரவுள்ளதாகவும், ஜிஎஸ்டி படிப்பு முறையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறினார்.