இந்தியா

அரசு பங்களாவை சேதப்படுத்திய அகிலேஷ் ! உ.பி.யில் நடக்கும் அரசியல்..!

Rasus

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அரசு பங்களாவை காலி செய்யும் நேரத்தில் பல பொருட்கள் சேதமடைந்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடத்தி வந்தது. முதலமைச்சர் பதவி பறிபோன பின்பும் அகிலேஷ் யாதவ் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை பயன்படுத்தி வந்தார். இதனிடையே முன்னாள் முதலமைச்சர்கள் அரசு பங்களாவை பயன்படுத்த உரிமை இல்லை என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து தான் பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை அகிலேஷ் யாதவ் காலி செய்தார். ஆனால் அகிலேஷ் யாதவ் காலி செய்யும் நேரத்தில் பங்களாவில் இருந்த பல பொருட்கள் சேதமடைந்திருந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு சில பொருட்கள் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு அம்மாநில ஆளுநர் ராம் நாயக் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், அகிலேஷ் யாதவ் தங்கியிருந்த விக்ரமாதித்யா மார்க்கில் உள்ள அரசு பங்களாவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக மீடியாக்களில் செய்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் பங்களாக்களில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் பொதுமக்களின் வரிப்பணத்தில் தான் நடைபெறுகிறது. மாநில அரசிற்கு சொந்தமான பங்களாவில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கமாயின் அதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் நாயிக் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.