இந்தியா

25 ரொட்டி.. ஒரு மீல்ஸ்.. பணி நேரத்தில் தூங்கிய UP காவலர் கொடுத்த அடடே விளக்கம்!

JananiGovindhan

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்றுள்ள ஜித்து ஜில்லாடி பாடலில் “நல்ல நாலுலையும் வீட்டுல தங்கல.. கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல” என்ற வரி வரும். இப்படியாக இரவு பகல் பாராது போலீசார் 24 மணிநேரமும் பணியாற்றி வருவதால் தங்களுக்கும் சுழற்சி முறையிலான வார விடுப்பு போன்ற பலன்களை கொடுக்குமாறு தொடர்ந்து காவல்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இருப்பினும் ஆங்காங்கே சில காவலர்களின் அலட்சிய தன்மையால் பிற காவல்துறையினரையும் அவை சங்கடத்தில் இட்டுச் சென்றுவிடுகிறது. அப்படியான சம்பவம்தான் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.

அதன்படி உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்புர் பகுதியில் போலீஸ் பயிற்சியில் இருந்த தலைமை காவலர் ஒருவர் பணிநேரத்தின் போது தூங்கிக் கொண்டிருந்தது அம்பலமானதோடு, அதற்காக மன்னிப்புக்கேட்டு அவர் எழுதிய கடிதமும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதன்படி, ராம் ஷரீஃப் யாதவ் என்ற தலைமைக் காவலர் கடந்த திங்களன்று பயிற்சி நேரத்தின் போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்திருக்கிறார். இது குறித்து அறிந்த கமாண்டர் இது கடுமையான அலட்சியப்போக்கு என்றும் இந்த செயலுக்காக உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதனையடுத்து ராம் ஷரீஃப் யாதவ் எழுதிய விளக்க கடிதத்தில், “தாதுபூரில் நடக்கும் பயிற்சிக்காக லக்னோவில் இருந்து சென்றிருந்தேன். ஆனால் அங்கு செல்வதற்குள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. முறையாக சாப்பாடும் கிடைக்காததால் தூங்கவும் முடியவில்லை.

ஆகையால், மறுநாள் காலை 25 ரொட்டியும், ஒரு பிளேட் சாப்பாடு, காய்கறிகள் சாப்பிட்டேன். நிறைய சாப்பிட்டதால் அசதியில் நன்றாக தூங்கிவிட்டேன். இனி இதுப்போன்று நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ராமின் இந்த கடிதம் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகியிருக்கிறது.